ஜம்மு: உலகப் புகழ்பெற்ற அமர்நாத் புனித யாத்திரை நடப்பு ஆண்டுக்காக இன்று தொடங்கியுள்ளது. 12,730 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வரும் இந்த யாத்திரை, வரும் ஆகஸ்ட் 28 வரை நடைபெறும்.
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, நேற்று பகவதி நகர் அடிவார முகாமில் கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார். யாத்திரையின் போது பக்தர்களின் பாதுகாப்புக்கு பல அடுக்குகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணுவம், போலீஸார், பேரிடர் மீட்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தனிப்பட்ட கடிதம் எழுதியுள்ளார். அதில், “அமர்நாத் யாத்திரை ஒரு சாதாரண மதப் பயணம் அல்ல. இது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் பயணம்” என்று கூறியுள்ளார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை இந்த யாத்திரை பிரதிபலிப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் பக்தர்களை அன்புடன் வரவேற்பதைப் பாராட்டியும் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

மேலும், யாத்திரையின் போது பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இமயமலைப் பகுதி மற்றும் யாத்திரைப் பாதைகளை சுத்தமாக வைத்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். அதிகாரிகள் வழங்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க உள்ளூர் பொருட்கள் மற்றும் கடைகளை ஆதரிக்க வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பிய பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அன்புக்குரியவர்களின் பெயரில் ஒரு மரக்கன்றை நட வேண்டும். யாத்திரையின் போது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வை வளர்க்க வேண்டும் என்பவை அந்த ஐந்து முக்கிய அறிவுரைகளாகும்.
பிரதமர் மோடி, யாத்திரையை சீராக நடத்த உழைக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பக்தர்கள் பாதுகாப்புடன் யாத்திரையை நிறைவு செய்து திரும்ப வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் அமேசான் CEO சந்திப்பு! அடுத்த 5 ஆண்டுகளில் 48 பில்லியன் டாலர் முதலீடு!