ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை வாங்கியதாக கூறப்படும் பெண்ணிடம் இருந்து பச்சிளம் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள மாங்காதோப்பு 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா, 38. டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அவாமா, 36. இந்த தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அவாமா கர்ப்பமாக இருந்தார். கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிறந்து 48 மணி நேரமே ஆன பெண் குழந்தை விற்பனை! ரூ.9 லட்சம் விலை! தாய் உட்பட 9 பேர் கைது!
பிறந்த குழந்தையை குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு ஒருவரிடம் ஒப்படைக்க தம்பதியினர் முடிவு செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த சம்ரீன் தாஜ் என்பவரிடம் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவல் ஆம்பூர் நகர காவல்துறையினருக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குழந்தை யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர்.
தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சையத் அக்பரின் மனைவி சம்ரீன் தாஜ், 30, என்பவரிடம் இருந்து பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை விற்பனை தொடர்பாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதா, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, குழந்தையை வாங்கியதன் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் குழந்தையை பணத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் ஆம்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளதா என்பதும் போலீஸ் விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் தொடர்பான இதுபோன்ற சம்பவங்களில் சட்ட விதிகள் கடுமையாக இருப்பதால், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்து 48 மணி நேரமே ஆன பெண் குழந்தை விற்பனை! ரூ.9 லட்சம் விலை! தாய் உட்பட 9 பேர் கைது!