திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்து வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்துக்குப் பிறகு, எஞ்சியுள்ள அமோனியாவை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலை சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து மாற்றமும் தொடர்ந்து அமலில் உள்ளது.
கடந்த மாதம் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 14 பேர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, தொழிற்சாலையில் பணியாற்றிய ஒடிசா, அசாம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொழிற்சாலை வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: அம்மோனியா வாயுக் கசிவு..! அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்..!! பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு..!!
பணிகள் நடைபெறும் இடத்தைச் சுற்றிய 300 மீட்டர் பரப்பளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவுக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மீட்புப் பணிகள் மூன்று தனித்தனி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல் மண்டலத்தில் 16 தொழில்நுட்ப நிபுணர்கள் அமோனியா வாயுவை பாதுகாப்பாக டேங்கர் லாரிக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது மண்டலத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது மண்டலத்தில் மருத்துவக் குழுவினரும் காவல்துறையினரும் கண்காணிப்பு மற்றும் அவசர உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை வரை மூன்று சேமிப்பு தொட்டிகளில் இருந்த சுமார் 2 டன் அமோனியா பாதுகாப்பாக டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல், தொழிற்சாலையின் குழாய்கள், வால்வுகள் மற்றும் பிற அமைப்புகளில் எஞ்சியிருந்த அமோனியா வாயுவை சேகரித்து மீண்டும் தொட்டிக்கு கொண்டு வந்து, அங்கிருந்து டேங்கர் லாரிக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் மாலைக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!