தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணிகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) வழங்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வரும் விசிக-விற்கு வெறும் 8 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதை அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டணிக்காக எவ்வளவோ உழைத்தவர் திருமாவளவன். அவருக்கு வெறும் 8 சீட் என்பது மிகப்பெரிய துரோகம் என அவர் விமர்சித்தார்.

அதே சமயம், திமுக கூட்டணிக்குத் தாமதமாக வந்த தேமுதிக-விற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை அவர் ஒப்பிட்டுக் காட்டினார். கூட்டணிக்கு வந்த உடனேயே தேமுதிக-விற்கு 10 இடங்களை வாரி வழங்கிய திமுக, ஆரம்பத்தில் இருந்தே உழைத்து வரும் விசிக-வை வெறும் 8 இடங்களோடு முடக்கியிருப்பது என்ன நியாயம்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!
திமுக தனது கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளைச் சரியாக நடத்துவதில்லை என்பதையே இது காட்டுகிறது என அன்புமணி குறிப்பிட்டார். உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல், புதிய கூட்டணிக் கணக்குகளுக்காகப் பழைய நண்பர்களைப் புறக்கணிப்பது திமுக-வின் அரசியலாகும் என அவர் சாடினார்.
தற்போது விசிக தலைவர் திருமாவளவன் தான் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் இந்த விமர்சனம் விசிக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், திமுக தரப்பிலிருந்து இதற்கு இன்னும் முறையான பதிலடி வரவில்லை.
இதையும் படிங்க: “ஏய் கொடிய கழட்டு...”... ராமதாஸ் ஆதரவாளரை மிரட்டிய அன்புமணி ஆதரவாளர்கள்..!!