இந்தியாவில் காலியாகும் 25 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜூன் 21 மற்றும் ஜூலை 19 தேதிகளில் பல எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனுடன், தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா இடத்திற்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் சி.வி.சண்முகம் (C. V. Shanmugam) ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்த இடம் காலியாகியுள்ளது. மயிலம் தொகுதியில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் அவர் தனது எம்.பி. பதவியை விட்டுவிட்டார். அந்த பதவிக்காலம் 2028 வரை இருப்பதால், தற்போது அதற்கான இடைத்தேர்தல் அவசியமாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை (K. Annamalai) ஆந்திரா மாநிலம் வழியாக ராஜ்யசபாவுக்கு செல்ல வாய்ப்பு அதிகமாக இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

ஆந்திராவில் ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, காலியாகும் 4 இடங்களை கூட்டணி ஒப்பந்தப்படி பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு இடத்தில் அண்ணாமலையை நிறுத்த பாஜக மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையை தேசிய அரசியலுக்கு கொண்டு சென்று மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நகர்வு பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவருக்கு, தேசிய அளவில் பெரிய பங்கு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பாஜக வட்டாரங்களில் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்திற்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) வேட்பாளர் நிறுத்துவது உறுதியாகியுள்ளது. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, விஜயின் நெருங்கியவர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இறுதியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் தவெகவுக்கு தாவும் பாஜக இளைஞர்கள்! கட்சியை காக்க மீண்டும் தலைமை ஏற்கிறார் அண்ணாமலை?!