டெல்லியில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திய அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் ஆகஸ்ட் 16-ம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ பகுதியில் இன்று சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாஜ்பாயின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பாஜக மூத்த தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது நினைவை போற்றினர்.
இதையும் படிங்க: செங்கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வு! மெய்சிலிர்க்க வைத்த தருணம்! அமித் ஷா சொன்ன முக்கிய வார்த்தைகள்
வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர். சிறந்த நாடாளுமன்றவாதி, கவிஞர், பேச்சாளர் மற்றும் நிர்வாகி என பல்வேறு தளங்களில் புகழ்பெற்ற அவர், கூட்டணி அரசியலில் முக்கியமான தலைவராகவும் திகழ்ந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தின.

இதற்கிடையே, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில் வாஜ்பாயை நினைவுகூர்ந்துள்ளார். தேச சேவைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட சிறந்த அரசியல் ஆளுமை வாஜ்பாய் என பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், வாஜ்பாயின் முயற்சிகள் பல தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகவும், அவரது தலைமைத்துவம் நாட்டை வலுப்படுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி மற்றும் மக்கள் நலன் மீதான வாஜ்பாயின் கவனம் இன்றும் வழிகாட்டியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய மக்களுக்கு அமெரிக்கா சுதந்திர தின வாழ்த்து: மோடி-டிரம்ப் உறவு குறித்து முக்கிய தகவல்!!