பெங்களூர்: வயதான ஒரு பெண்ணை 5 மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் செய்து மிரட்டி ரூ.24 கோடி பணம் பறித்த 5 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த லட்சுமி ராமமூர்த்தி என்பவர் சமீபத்தில் ஒரு நிலத்தை விற்று பணம் பெற்றுள்ளார். இதை அறிந்த மோசடியாளர்கள், தங்களை விசாரணை அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்தி அவரை தொடர்பு கொண்டனர். பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி மிரட்டி டிஜிட்டல் அரெஸ்ட் செய்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை தொடர்ந்து மிரட்டியதால், லட்சுமி ராமமூர்த்தி தனது குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் பல தவணைகளில் ரூ.24 கோடியை மோசடியாளர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

மோசடியாளர்கள் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால், லட்சுமி 1.3 கிலோ தங்கத்தை அடகு வைக்க ஐசிஐசிஐ வங்கிக்கு சென்றார். அப்போது வங்கி மேலாளர் அவரது பதிலில் சந்தேகம் அடைந்து, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரணையில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பணம் பறிக்கப்பட்டது உறுதியானது.
இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், கவுரவ் குமார், ஓம்பிரகாஷ் ராஜ்புத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மோசடியாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பணம் அனுப்பச் சொன்ன 22 வங்கிக் கணக்குகளையும் கண்டறிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் டிஜிட்டல் மோசடிகளின் அபாயத்தை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கிறது. வயதானவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து நடைபெறும் இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!