மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று (ஜனவரி 15) நூற்றுக்கணக்கான காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. இதில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 'சிறந்த காளை' என்ற அந்தஸ்தைப் பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட டிராக்டரை விருமாண்டியின் காளை தட்டிச் சென்றது. போட்டி முடிவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விருமாண்டி, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு, ஆன்லைன் டோக்கன் முறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: 22 காளைகள்.. ஒரு பாலமுருகன்! அவனியாபுரத்தில் சீறிப்பாய்ந்து காரை தட்டி சென்ற ஒற்றைச் சிங்கம்!
செய்தியாளர்களிடம் பேசிய காளை உரிமையாளர் விருமாண்டி, இந்த ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எனது காளை முதல் பரிசு வென்றது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது; முதலமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட டிராக்டரை வென்றது என் காளைக்குக் கிடைத்த பெருமை எனத் தெரிவித்தார். அதேசமயம், ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான டோக்கன் பெறுவதில் உள்ள கஷ்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், டோக்கன் வாங்குவதற்காகவே நான் மிகவும் சிரமப்பட்டேன்; அடுத்தடுத்த ஆண்டுகளில் காளை உரிமையாளர்கள் எளிதாக டோக்கன் பெற அரசு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், மாடுபிடி வீரர் குறித்துப் பேசுகையில், இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாடுபிடி வீரராக முதல் பரிசு பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்; இருப்பினும் எனது காளைக்கு அங்கீகாரம் கிடைத்தது திருப்தி அளிக்கிறது என்றார். அவனியாபுரத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் தனது காளையைக் களம் இறக்கப் போவதாகவும், அங்கும் தனது காளை பிடிபடாமல் வெற்றி வாகை சூடும் எனவும் அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!