பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜ) அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றிய தேஜ கூட்டணி, ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வென்றது. இதர கட்சிகள் 6 இடங்களைப் பிடித்தன.
2020 தேர்தலை ஒப்பிடுகையில், தேஜ கூட்டணி கூடுதலாக 80 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், 2020-ல் 114 இடங்களில் வென்ற இண்டி கூட்டணி இம்முறை 79 இடங்களை இழந்து பெரும் தோல்வியைச் சந்தித்தது.
பாஜக 101 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 101 இடங்களில் நின்று 85 இடங்களைக் கைப்பற்றியது. சிராக் பஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சி 19 இடங்களிலும், ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 5 இடங்களிலும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வென்றன.
இதையும் படிங்க: நாளை பீகார் 2ம் கட்ட தேர்தல்!! இந்தியா - நேபாளம் எல்லை மூடல்! பணிகள் விறுவிறு!
அதிக இடங்களைப் பிடித்த பாஜகவில் இருந்து முதல்வர் வருவார் என்று ஆரம்பத்தில் தகவல்கள் பரவின. ஆனால், பாஜக தலைமை அதை மறுத்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டில்லியில் தேஜ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் யார், அமைச்சர்கள் எண்ணிக்கை, கட்சிகளுக்கு ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டன.
பாஜகவுக்கு 15 அல்லது 16 அமைச்சர் பதவிகளும், ஜேடியூவுக்கு 14 பதவிகளும் ஒதுக்கப்பட்டன. சிராக் பஸ்வானின் கட்சிக்கு 3 அமைச்சர்களும், ஜிதன் ராம் மாஞ்சியின் கட்சிக்கு 1 அமைச்சரும், உபேந்திர குஷ்வாஹாவின் கட்சிக்கு 1 அமைச்சரும் வழங்கப்படும். ஆறு எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு அமைச்சர் என்ற அமித் ஷாவின் ஆணைப்படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வராக நிதிஷ் குமார் தொடர்வார் என்று முடிவாகியுள்ளது. பாஜகவுக்கும் சிராக் பஸ்வான் கட்சிக்கும் தலா ஒரு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். புதிய அரசின் பதவியேற்பு விழா வரும் 19 அல்லது 20-ம் தேதி நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் விழாவில் கலந்துகொள்வார்கள்.
இண்டி கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும், சிறிய கட்சிகள் 4 இடங்களையும் பிடித்தன. அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் 5 இடங்களை வென்றது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 238 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது.
ஓட்டு திருட்டு, பாஜக மதவாத அரசியல் என்று தேஜஸ்வி யாதவும் ராகுல் காந்தியும் குற்றம்சாட்டினர். ஆனால், பீகார் மக்கள் அதை நிராகரித்து, நல்லாட்சி மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் தேஜ கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்தனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் பீகார் தேர்தல்! ஓய்ந்தது 2ம் கட்ட பிரசாரம்!! நாளை மறுநாள் வாக்குப்பதிவு!