பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்து பேசியதாக தென்காசி மாவட்ட திமுக செயலாளர் மீது பாஜகவினர் புகார். சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி உருவப்படத்தை சேதப்படுத்தினர். சிதம்பரம் நகர காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு.
தென்காசி மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் என்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்து பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று பாஜகவினர் சிதம்பரம் தெற்கு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் விஷால், மாவட்ட பொருளாளர் புருஷோத்தமன், நிர்வாகிகள் ஸ்ரீதரன், கோபிநாத் உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் தெற்கு வீதியில் திரண்டனர்.
இதையும் படிங்க: கையில் மனுவோடு பிரதமரை சந்தித்த EPS... என்னென்ன கோரிக்கைகள் தெரியுமா?... முழு விவரம்...!
பின்னர் தென்காசி மாவட்ட திமுக செயலாளரைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது திடீரென அவரது உருவப்படத்தை கீழே போட்டு செருப்பால் மிதித்தும், தாக்கியும் கோஷமிட்டனர். இதையடுத்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக நடந்து சென்றனர்.
பின்னர் காவல் நிலையம் முன்பும் முற்றுகையிட்டு கண்டனமுழக்கங்களை எழுப்பினர். அப்போது வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து தென்காசி மாவட்ட திமுக செயலாளர் மீது பாஜகவினர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிதம்பரத்தில் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பீகார் முதல்வராக நிதீஷ் குமார் நாளை பதவி ஏற்பு… பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு…!