மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மாநிலங்களில் இருந்து ஏப்ரல் மாதம் ஓய்வு பெறும் 37 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தலில், பாஜக கூட்டணி கூடுதலாக 8 அல்லது 9 இடங்களை கைப்பற்றும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹாராஷ்டிரா (7 இடங்கள்), பீகார் (5), ஒடிசா (4), அசாம் (3), மேற்கு வங்கம் (5), தமிழ்நாடு (6), சத்தீஸ்கர், ஹரியானா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக அதிக பெரும்பான்மை பெற்ற மஹாராஷ்டிரா, பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கூட்டணி வலுவாக உள்ளது.
மஹாராஷ்டிராவில் 288 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 131 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே 7 இடங்களில் 6-ஐ கூட்டணி உறுதியாக கைப்பற்றும். மீதமுள்ள ஒன்றை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே தடுக்க முடியும். பீகாரில் 243 உறுப்பினர்களில் கூட்டணிக்கு 133 பலம் உள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் தற்போதுள்ள 2 இடங்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி தேர்தல் அறிவிப்பு! திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி! கழுத்தை நெறிக்கும் கூட்டணி கட்சிகள்!!

அசாமில் 3 இடங்களும், ஒடிசாவில் 4 இடங்களும் பாஜக கூட்டணியே கைப்பற்றும். சத்தீஸ்கர், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் வெற்றி உறுதி. மேற்கு வங்கத்தில் 5 இடங்களில் 4-ஐ திரிணமுல் காங்கிரஸ் கைப்பற்றும். ஒரு இடத்தை பாஜக வெல்லும். தமிழ்நாட்டில் 6 இடங்களில் திமுக 4-ஐ உறுதியாக பெறும். ஒரு இடம் அதிமுகவுக்கு கிடைக்கும். மீதமுள்ள ஒரு இடத்தில் கடும் போட்டி நிலவும்.
காங்கிரஸ் ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஹரியானா ஆகியவற்றில் இருந்து 4 இடங்களை மட்டுமே பெற வாய்ப்புள்ளது. ஓய்வு பெறும் 4 எம்பிக்களுக்கு பதிலாக 4 பேர் மட்டுமே வருவதால் காங்கிரஸ் பலம் அதிகரிக்காது.
2014-ல் ஆட்சிக்கு வந்தபோது ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 55 இடங்கள் மட்டுமே இருந்தன. 2017-ல் 58 ஆக உயர்ந்து தனிப்பெரும் கட்சியானது. 2020-ல் 92 ஆனது. 2025-ல் முதன்முறையாக 100-ஐ கடந்து 103 ஆனது. தற்போது என்டிஏ கூட்டணியின் பலம் 134. மார்ச் 16 தேர்தலுக்குப் பிறகு 8-9 இடங்கள் கூடுதலாக கிடைப்பதால் பாஜகவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும்.
ராஜ்யசபாவில் 245 இடங்களில் (தற்போது 243) பெரும்பான்மைக்கு 123 தேவை. என்டிஏவின் பலம் 134-ஐ தாண்டி மேலும் உயரும் என்பது உறுதியாகியுள்ளது. இது மோடி அரசுக்கு மேலும் வலு சேர்க்கும்.
இதையும் படிங்க: ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி... கோடி கோடியாக கொள்ளை..!! தமிழிசை தாக்கு..!