தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஒரு முக்கிய தீர்ப்பு. சென்னை உயர்நீதிமன்றம், திமுக அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் (MAWS) நடந்ததாகக் கூறப்படும் ₹888 கோடி லஞ்ச ஊழல் வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பிப்ரவரி 20, 2026 அன்று வெளியானது.
அமலாக்கத் துறை (ED) கடந்த அக்டோபர் 27, 2025 அன்று தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், MAWS துறையில் 2,538 பணியிடங்களுக்கான நியமனத்தில் ₹888 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக குற்றஞ்சாட்டியது. இதில் அமைச்சர் நேரு மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடையதாக ED கூறியது. அதேபோல, டிசம்பர் 2025-ல் ₹1,020 கோடி டெண்டர் ஊழல், ஜனவரி 2026-ல் ₹365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச ஊழல் என்று ED மூன்று முறை ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியது. ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் DVAC-ஐ கண்டித்து FIR பதிவு செய்ய உத்தரவிட்டது. ED அளித்த ஆதாரங்கள் போதுமானவை என்று நீதிமன்றம் கூறியது. இதை வரவேற்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மறுதணிக்கைக்கு சென்ற ஜனநாயகன்! கோர்ட் கொடுத்த அனுமதி! விஜய் ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல்!
அண்ணாமலை கூறியதாவது: திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.

கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ₹888 கோடி ஊழலில், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத்துறை வலியுறுத்தியிருந்தது. அதே போல, கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் சுமார் ₹1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தது.
இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ₹365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது.
தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்?
திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ₹2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா?
உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ₹1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ₹365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!