கீவ்: 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துவரும் முழு அளவிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்கா தயாரித்த 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்த திட்டத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்த திட்டத்தின் விவரங்களை ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த திட்டம் அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து தயாரித்தது என்றும், ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தலைமையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மியாமி உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மாஸ்கோவில் ரஷிய ஜெனரல் கொலை! கார் குண்டுவெடிப்புக்கு உக்ரைன் சதியா? விசாரணை தீவிரம்!
முதலில் 28 அம்சங்களாக இருந்த திட்டம், உக்ரைன் எதிர்ப்பைத் தொடர்ந்து 20 அம்சங்களாக குறைக்கப்பட்டது. இதில் உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள், பொருளாதார உதவி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஜெலன்ஸ்கி கூறுகையில், இந்த திட்டத்தில் பெரும்பாலான அம்சங்களுக்கு உக்ரைனும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் டொன்பாஸ் பகுதி (டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க்) மற்றும் ஜபோரிஜ்ஜியா அணு உலை நிர்வாகம் ஆகிய இரு முக்கிய பிரச்னைகளில் இன்னும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை.
ரஷ்யா இந்த பகுதிகளை முழுமையாக கோரி வருகிறது. இதற்கு மாற்றாக டொன்பாஸில் ராணுவமயமாக்கப்படாத பகுதி (demilitarized zone) அமைக்கலாம் என்றும், அதை உக்ரைன் நிர்வகிக்கலாம் என்றும் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த 20 அம்ச திட்டத்தின் முக்கிய விவரங்கள்:
- உக்ரைனின் இறையாண்மையை அனைத்து தரப்பும் கையெழுத்திட்டு உறுதி செய்ய வேண்டும்.
- ரஷ்யா-உக்ரைன் இடையே முழுமையான ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். நீண்டகால அமைதியை கண்காணிக்க தனி அமைப்பு உருவாக்கப்படும்.
- உக்ரைனுக்கு வலிமையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படும்.
- அமைதி காலத்தில் உக்ரைன் ராணுவம் 8 லட்சம் வீரர்களுடன் இருக்கும்.
- அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய யூனியன் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும். ரஷ்யா மீண்டும் தாக்கினால் ராணுவ பதிலடி மற்றும் தடைகள் அமலாகும். உக்ரைன் தாக்கினால் உத்தரவாதங்கள் ரத்து.
- ரஷ்யா ஐரோப்பா மற்றும் உக்ரைன் மீது படையெடுக்காத கொள்கையை உருவாக்க வேண்டும்.
- உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் குறிப்பிட்ட காலத்தில் இணையும்.
- உக்ரைனில் முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு சர்வதேச திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
- உக்ரைன் பொருளாதார மீட்சிக்கு நிதி உதவி வழங்கப்படும்.
- ஒப்பந்தத்துக்குப் பின் உக்ரைன்-அமெரிக்கா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடங்கப்படும்.
- உக்ரைன் அணு ஆயுதமற்ற நாடு என உறுதி செய்ய வேண்டும்.
- ஜபோரிஜ்ஜியா அணு உலையை அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் இணைந்து நிர்வகிக்கும் (இதில் இன்னும் ஒப்பந்தம் இல்லை).
- இரு நாடுகளும் பள்ளிகளில் கலாசார புரிதல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
- டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், ஜபோரிஜ்ஜியா, கெர்சன் பகுதிகளில் ஒப்பந்த தேதி அடிப்படையில் எல்லை அங்கீகரிக்கப்படும் (இதில் இன்னும் ஒப்பந்தம் இல்லை).
- பிராந்திய எல்லைகளை வலுக்கட்டாயமாக மாற்றக்கூடாது.
- டின்ப்ரோ நதியை உக்ரைன் வணிகத்துக்கு பயன்படுத்த ரஷ்யா தடுக்கக்கூடாது.
- நிலுவை பிரச்னைகளுக்கு தனி குழு ஏற்படுத்தப்படும்.
- ஒப்பந்தத்துக்குப் பின் உக்ரைன் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்.
- ஒப்பந்தம் சட்டரீதியாக கையெழுத்தாகும். அதை அதிபர் டிரம்ப் தலைமையிலான குழு கண்காணிக்கும். உக்ரைன், ஐரோப்பா, நேட்டோ, ரஷ்யா, அமெரிக்கா உறுப்பினர்களாக இருப்பர்.
- அனைவரும் ஏற்ற பின் ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும்.
போருக்குப் பிந்தைய புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு உக்ரைன்-அமெரிக்கா இடையே தனி இருதரப்பு ஒப்பந்தம் போடப்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யாவின் பதில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவுமா என உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதையும் படிங்க: மோடிஜி என்னை காப்பாத்துங்க!! பொய் கேஸ் போட்டு சிக்க வச்சிட்டாங்க! ரஷ்யாவில் இப்படியுமா நடக்குது?