சென்னை பெருங்குடி அம்பேத்கர் நகர் பெருந்தலைவர் காமராஜர் நகரில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஷண்முக பிரியா என்பவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஒன்று காலை 11:45 மணி முதல் சோதனையை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான வழக்கில் இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திமுக தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி அளவில் லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அன்பில் மகேஷ் வழக்கில் அடுத்து கைதாக போவது யார்? அமைச்சர் மரிய வில்சல் கொடுத்த ஹிண்ட்!
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கில் அவரைக் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதான அன்பில் மகேஷ் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி சத்தியமூர்த்தி அவரை நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து அரசு அனுமதி, அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதி பெற்றுத் தருவதாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் பல பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளதாகவும் பல கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அன்பில் மகேஷ் மற்றும் தொடர்புடையவர்களின் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது பெருங்குடியில் நடைபெற்று வரும் சோதனையும் இந்த வழக்கின் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூர்லயே விஜய் கதையை முடிச்சிருக்கணும் தலைவரே! திமுக எம்.எல்.ஏ ஆவேசம்! போலீஸ் வலை!