கர்நாடகாவின் கார்வார் கடற்கரைப் பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா நேற்று முன்தினம் (டிசம்பர் 17) பறக்க முடியாத நிலையில் பிடிபட்டது.
இந்தியாவின் முக்கிய கடற்படைத் தளமான ஐஎன்எஸ் கடம்பா இப்பகுதிக்கு மிக அருகில் உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக உஷாரானார்கள். இத்தளத்தில் இந்தியாவின் முன்னணி விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் நிறுத்தப்பட்டுள்ளன.
பிடிபட்ட கடல் புறாவின் முதுகில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவியை வனத்துறையின் கடல்சார் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆரம்ப ஆய்வில் இது பறவைகளின் இடப்பெயர்வு குறித்த அறிவியல் ஆராய்ச்சிக்காகப் பொருத்தப்பட்ட கருவி என்று தெரியவந்தது.
இதையும் படிங்க: 2026ல் குடியரசு தின அணி வகுப்பு!! சிறப்பு விருந்தினர் யார் யார்? வெளியானது அப்டேட்!
கருவியில் இருந்த இ-மெயில் முகவரி சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டது. இந்தப் பறவை சுமார் 10,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து கர்நாடக கடற்கரைக்கு வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்தது.

இருப்பினும், கடற்படைத் தளத்துக்கு மிக அருகில் இந்தப் பறவை பிடிபட்டதால் உளவு சந்தேகம் எழுந்தது. ஜிபிஎஸ் கருவியில் உளவு கேமரா அல்லது சந்தேகத்துக்கிடமான மென்பொருள்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த கடல் புறா வனத்துறையினரின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறது.
இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த நவம்பர் 2024-இல் கார்வார் பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட ஒரு கழுகு பிடிபட்டது. ஆய்வுக்குப் பிறகு அது பறவைகளின் இடப்பெயர்வு ஆராய்ச்சிக்காகப் பொருத்தப்பட்ட கருவி என்று உறுதி செய்யப்பட்டது.
சீனாவுடனான எல்லைப் பிரச்சனைகள் தொடரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன. ஆய்வு முடிவுகள் வெளியான பிறகே இது அறிவியல் ஆராய்ச்சி தொடர்பானதா அல்லது வேறு நோக்கம் உள்ளதா என்பது தெளிவாகும்.
இதையும் படிங்க: காசாவுக்கு பாக்., படையை அனுப்புங்க! அழுத்தம் தரும் ட்ரம்ப்! உள்நாட்டு எதிர்பால் கையை பிசையும் அசிம்!