கோவையைச் சேர்ந்த மூத்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான புவியரசு, தனது 96வது வயதில் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள இரங்கல் குறிப்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான திரு. புவியரசு அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சமூகப் பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு அவர்கள். ‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது, ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் திரு. புவியரசு அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
யார் இந்த புவியரசு?
தமிழகத்தின் மூத்த கவிஞர் புவியரசு, இன்று காலை கோவையிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 96. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை அருகேயுள்ள லிங்கவநாயக்கன் புதூர்தான் புவியரசுவின் சொந்தஊர். அவருடைய உண்மையான பெயர் ஜெகநாதன். சமஸ்கிருத வார்த்தை என்பதால் அதைத் தமிழாக்கம் செய்து புவியரசு என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதை, அவர் பல முறை பல மேடைகளில் பகிர்ந்துள்ளார்.
கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் பேரூர் தமிழ்க்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் படித்து தமிழ் வித்வான் பட்டம் பெற்று, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். கடந்த 1950 களிலிருந்து இவர், தமிழில் கவிதை நூல்களை வெளியிடத்துவங்கி, தற்போது வரை 100க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள், நாடகங்கள், நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ள புவியரசு, திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கமலுடன் தொடர்ந்து நட்புடன் இருந்த புவியரசு, அவருக்காக மருதநாயகம் படத்திற்கு 2 ஸ்கிரிப்ட்கள் எழுதியிருந்தார்.
தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசைப் பெற்றுள்ள புவியரசு, கேரள பண்பாட்டு மையத்தின் சாகித்ய புரஸ்கார் விருது, கலைஞர் பொற்கிழி விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இரு முறை சாகித்ய அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் படைப்பாளிகள் பலருக்கும் அவர் ஞானத்தந்தையாக இருந்தார் என்று கூறுகிறார் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான அவை நாயகன்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் ''புரட்சிக்காரன்'' என்ற கவிதை நூலுக்காக, சிறந்த மொழிபெயர்ப்புக்கு ஒரு முறையும், 2009 ஆம் ஆண்டில் 'கையொப்பம்' என்ற தமிழ் கவிதை நூலுக்காக ஒரு முறையுமாக 2 சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றுள்ளார். கேரள பண்பாட்டு மையத்தின் சாகித்ய புரஸ்கார் விருது, கலைஞர் பொற்கிழி விருது, தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு ஆகியவையும் இவருக்குக் கிடைத்த வேறு சில அங்கீகாரங்களாகும்.
இதையும் படிங்க: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2 ஆம் நாள் மாநாடு..! முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனைகள்..!!
இதையும் படிங்க: நேர்ல போய் பாக்கமாட்டாரா..? CM விஜயை துரத்திய கேள்விகள்... ஒருவழியாக கரூர் செல்ல திட்டம்..!