தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் பல்வேறு முக்கியத் துறை சார்ந்த மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு நாளை ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் முதல் நாளான நாளை (ஜூன் 29) காலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனையை மேற்கொள்கிறார். இக்கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டத்தின் செயல்பாடுகள், பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் நலன் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த உத்திகள் விவாதிக்கப்படவுள்ளன. மேலும், முதியோர் நலன், சட்ட விரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருட்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் தனியாகப் பேசி ஆலோசனைகளை வழங்குகிறார். இந்தத் தனிப்பட்ட கூட்டத்தில், அரசின் 28 துறைகளில் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலவரங்கள் குறித்தும், 'வெற்றி தமிழகம்' தொலைநோக்கு ஆவணத்தின் (Vision Document) அடிப்படையில் அடுத்தகட்டமாகச் செயல்படுத்த வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: அரசு நிர்வாகத்தின் வேகத்திற்கு முதலமைச்சரே உதாரணம்.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பாராட்டு!
மாநாட்டின் இரண்டாவது நாளான ஜூன் 30-ஆம் தேதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் இலக்குகள், வனப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துதல், வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல் மற்றும் வனப்பகுதிகளையொட்டி வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விலங்கு - மனித மோதல்களைத் தடுத்தல் உள்ளிட்ட வனத்துறை சார்ந்த முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
முன்னதாக, இந்த மாநாட்டிற்கான முன்னோடி நடவடிக்கையாக, சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் திரு. சாய் குமார் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்ட ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாளை முதலமைச்சர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய துறை சார்ந்த கோப்புகள் மற்றும் திட்டங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!