தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் திமுக தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுக, தனது வலுவான கூட்டணியைத் தக்க வைத்துக்கொள்ளவும், மேலும் விரிவுபடுத்தவும் முயன்று வரும் நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.திமுக தலைமை, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து அண்ணா அறிவாலயத்தில் தொடர்ச்சியான சந்திப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.
பிப்ரவரி 22-ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- உடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. அக்கட்சி 5 தொகுதிகளைக் கோரியது. அதைத் தொடர்ந்து மதிமுக, மமக, கொ.ம.தே.க., தவாக உள்ளிட்ட பல கட்சிகளுடன் அடுத்தடுத்து பேச்சுகள் நடைபெற்றன. ஒரு நாளில் 9 கட்சிகளுடன் கூட பேச்சுவார்த்தை நடத்திய நிகழ்வுகளும் உள்ளன. காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாகவும், சற்று சிக்கலானதாகவும் அமைந்தது. 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை 35 முதல் 45 தொகுதிகள் வரை கோரியது.

ஆனால் திமுக ஆரம்பத்தில் 25 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்தது. இதனால் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்தன. காங்கிரஸ் தரப்பில் ப. சிதம்பரம், கிரிஷ் சோடங்கர் போன்றோர் தலையீடு செய்தனர். திமுக தரப்பில் மு.க. ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று பின்னணி விவாதங்கள் நடைபெற்றன.மார்ச் 4-ஆம் தேதி இரு கட்சிகளும் இறுதி ஒப்பந்தத்தை எட்டின. காங்கிரஸ் கட்சி 28 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது.
இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்...! முதல்வருடன் OPS திடீர் சந்திப்பு...!! சூடு பிடிக்கும் அரசியல்..!!
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக திமுக குழுவினருடன் முதல்வர் அவசர ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் அன்பழகனின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.. அன்பழகன் உருவப்படத்திற்கு அமைச்சர் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், டி.ஆர். பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: நல்வரவு..!! திமுகவுடன் தேமுதிக கூட்டணி... முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!!