தமிழகத்தின் முதல் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நாளை (டிசம்பர் 2) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. உலகப் புகழ்பெற்ற பொலிகர் மற்றும் மாபில்லார்ட் (Bolliger and Mabillard) உள்ளிட்ட பிரம்மாண்ட சவாரிகள் இங்கு இடம் பெற்றிருப்பதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூரை அடுத்த இள்ளளூர் கிராமத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹611 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். இந்தப் பூங்கா நேரடியாக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வொண்டர்லா பூங்காவின் தலைசிறந்த அம்சமாக, உலகப் புகழ் பெற்ற Bolliger and Mabillard வகையிலான பிரமாண்ட ரோலர் கோஸ்டர் இங்கு அமைகிறது. லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் மட்டுமே உள்ள இந்த வகையைச் சேர்ந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு மட்டும் ₹75 முதல் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லஞ்சப் புகார் மற்றும் அலைச்சல் இல்லை.. புதிய கார்-பைக் பதிவுக்கு RTO விதிமுறையில் புதிய மாற்றம்!
இந்த வொண்டர்லா பூங்காவில், பெரியவர்களுக்காக 42 சவாரிகளும் (இதில் 16 நீர் சவாரிகள்), குழந்தைகளுக்கெனப் பிரத்யேகமாக 10 சவாரிகளும் என மொத்தம் 52 சவாரிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இன்வெர்ட்டர்ட் கோஸ்டர் தஞ்சோரா, ஸ்பின் மில், ஸ்கை ரயில் உள்ளிட்ட உலகத் தரத்திலான பல சவாரிகளும் இங்கு உள்ளன.

அடிப்படை டிக்கெட் விலையாக ஒருவருக்கு ஜிஎஸ்டி உள்பட ₹1,489 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் ஒருவருக்கு ₹1,789 வசூலிக்கப்படும்.
நாளை (டிசம்பர் 2) மட்டும், பூங்காவுக்கு வருவோருக்குச் சிறப்புச் சலுகையாக ₹1,199 டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 10 சதவீத தள்ளுபடியும், கல்லூரி மாணவர்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற ஊர்களில் செயல்பட்டு வரும் வொண்டர்லா பூங்காக்களில் இதுவரை பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் சவாரிகளும் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளனவாம். சவாரிகளை அவ்வப்போது ஆய்வு செய்து பராமரிக்கத் தனிக்குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாகச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை... என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க? அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை...!