சென்னையில் இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் மையப் பொருள் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்பதாகும். அண்மையில் பாமக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் நேரில் அளித்து, அதைச் செயல்படுத்துமாறு அன்புமணி வலியுறுத்த உள்ளார்.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உரிய பலன்கள் சென்றடையச் செய்வதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1931-ம் ஆண்டு கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் தற்போதைய இட ஒதுக்கீடு அமைந்துள்ள நிலையில், புதிய தரவுகள் இல்லாததால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைத் தவிர்க்கவும், சமூக நீதியை உறுதிப்படுத்தவும் புதிய கணக்கெடுப்பு அவசியம் என அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சமீபத்தில் சென்னையில் பாமக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சேகரிப்புப் புள்ளிவிவரச் சட்டம் 2008-ன் படி மாநில அரசுக்கு இதற்கான அதிகாரம் உள்ளது என்பதையும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: போலீசாருக்கு SPECIAL ட்ரீட்...? சிங்கப்பெண் படை தொடக்க விழாவில் விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!
திமுக, விசிக உள்ளிட்ட சில கட்சிகள் நேரில் பங்கேற்காவிட்டாலும், தொலைபேசி மூலமும் ஆதரவுக் கடிதங்கள் மூலமும் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் விஜயிடம் அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மான நகலை வழங்கி, வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு கோரிக்கை வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: மக்களால் நடந்த மாற்றம்..!! நாளையுடன் ஒரு மாதம் நிறைவு..!! விஜய்யின் தவெக ஆட்சி எப்படி இருக்கு..?? ஒரு பார்வை..!!