தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்று சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழகத்தின் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கைக்கான தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஜூலை 2ஆம் தேதியான இன்று முதல் ஜூலை 22ஆம் தேதி வரை துறைவாரியாக விரிவான ஆலோசனைக் கூட்டங்களை முதல்வர் விஜய் நடத்தத் தொடங்கியுள்ளார். இந்த ஆலோசனைகள் தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக அரசு மே 10, 2026 அன்று பொறுப்பேற்ற நிலையில், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடன் சுமை, நிதி நெருக்கடி உள்ளிட்ட சவால்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், பட்ஜெட்டைத் தயாரிப்பதற்கு முன்பாக துறைகளின் செயல்பாடுகள், நடைபெறும் திட்டங்கள், புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகள், நிதித் தேவைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளின் செயல்பாட்டு வாய்ப்புகள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ய முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார்.

ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் தொடங்கும் ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர்கள், துறைச் செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு துறையும் தங்கள் திட்டங்கள், செயல்பாட்டு முன்னேற்றம், புதிய யோசனைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை முன்வைக்கும்.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக தீவிரம்! மத்திய அரசே விசாரிக்க நடத்த ரகுபதி கோரிக்கை!
முதல் கட்டமாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் உயர் கல்வி, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாடு, தொழிலாளர் நலன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வரிசையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இறுதி நாளான ஜூலை 22ஆம் தேதி உள்துறை, தடை மற்றும் மதுவிலக்குத் துறைகளுடன் ஆலோசனை முடிவடையும்.
இதையும் படிங்க: திருச்சியில் கரைந்த அதிமுக கூடாரம்... தவெகவுக்கு தாவிய முக்கிய புள்ளிகள்... பட்டியலை பார்த்தாலே தலை சுத்துதே...!!