மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் முதல்வரும், த.வெ.க. தலைவருமான விஜய் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுக்கு பின்னால் தொகுதியின் அரசியல் சூழல் மற்றும் வாக்கு கணக்கீடு இருப்பதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்டோபர் 1-ம் தேதி கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீங்கள் அவதூறாக பேசப் பேச, மக்கள் உங்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள்!! உதயநிதிக்கு அமைச்சர் வார்னிங்!
இந்நிலையில், இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்காமல் தனியாக பிரசாரம் மேற்கொள்ளும் அணுகுமுறையை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 25-ம் தேதி மதுராந்தகம் தொகுதியில் விஜய் தனியாக பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அதன்பின்னர் செப்டம்பர் 30-ம் தேதி தாராபுரம் தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்தார்.

விஜயின் இந்த பிரசார அணுகுமுறை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பாணியை ஒத்திருப்பதாக சில அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் தொகுதியின் அரசியல் சூழல், கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளிட்ட அம்சங்களை தனித்தனியாக கணக்கிட்டு பிரசாரம் மேற்கொண்டதாக ஜெயலலிதாவின் தேர்தல் பாணி குறித்து கூறப்பட்டு வந்த நிலையில், அதேபோன்ற அணுகுமுறையை விஜய் பின்பற்றுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் மற்றும் தலித் சமூகங்களின் வாக்குகள் முக்கியமானவை என த.வெ.க. நிர்வாகிகள் கூறியுள்ளனர். கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருப்பதால் தலித் வாக்குகள் கிடைக்கும் எனவும், வன்னியர் சமூக வாக்குகளை ஈர்ப்பதற்கான அரசியல் கணக்கீட்டின் ஒரு பகுதியாக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழல் மாறியுள்ளதாகவும் த.வெ.க. நிர்வாகிகள் கூறுகின்றனர். எனினும், குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் எந்தக் கட்சிக்கு செல்லும் என்பதை உறுதியாகக் கூற முடியாது; அது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.
இதனால், கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்யும் நிலையில் விஜய் அதில் பங்கேற்காதது மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் மதுரை வருகையை முன்னிட்டு நாளை டிரோன்களுக்கு தடை! பாதுகாப்பு பணி தீவிரம்!