மதுரை: தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பதற்றம் இப்போது மதுரை வடக்கு தொகுதியில் வெடித்துள்ளது. மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி காங்கிரஸ் கட்சியை விமர்சித்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். "எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்" என்று அவர் எச்சரித்துள்ளது கட்சி தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நிருபர்களை சந்தித்த மாணிக்கம் தாக்கூர் பேசுகையில், "மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கோரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரை சந்தித்து பேசினேன். காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்துபவர்கள், இழிவாக பேசுபவர்களிடம் எந்த தயவும் காட்ட மாட்டோம். காங்கிரஸ் தொண்டர்களின் தன்மானம் எங்களுக்கு மிக முக்கியம்" என்று தீவிரமாக கூறினார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட நீண்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, "அவர் கூறியது தான் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. காங்கிரஸ் தொண்டர்களை இழிவுபடுத்திய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அதை நானும் ஆதரிக்கிறேன்" என்று வலியுறுத்தினார். கட்சி அமைப்பு ரீதியாக 85 சதவீதம் சீரமைக்கப்பட்டு பலம் சேர்ந்துள்ளதாகவும், இனி அவமானங்களை ஏற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புது புகைச்சல்: தளபதி vs ஜோதிமணி!! சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்!

இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியதை பாராட்டிய மாணிக்கம் தாக்கூர், "தன்மானம் உள்ள இளைஞர் காங்கிரஸ் தம்பிகளுக்கு என் பாராட்டுகள்" என்று கூறினார். அதேநேரம், "திமுகவில் அதிகார மமதையில் உள்ள மாவட்ட செயலாளருக்கு அப்படித்தான் தெரியும். கல்லணை போராட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் காங்கிரஸ் குரல் கொடுக்கிறது. ஆனால் அவர்கள் அதை பேசுவதில்லை" என்று குற்றம்சாட்டினார்.
கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேசிய அவர், "இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக உருவானது. தொகுதி பங்கீடு குறித்து பேசுவது தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தான். சீட்டு கிடைப்பது காங்கிரஸ் தலைமை முடிவு. ஆனால் காங்கிரஸ் கட்சியின் பலத்தை நாங்கள் காட்டுவோம். வந்தே மாதரம் ஜே என்று சொல்வது மட்டும் இல்லை, திருப்பி அடிக்கவும் தெரியும்" என்று காட்டமாக எச்சரித்தார்.
இந்த பேட்டி காங்கிரஸ்-திமுக கூட்டணியில் உள்ள பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. தொண்டர்களின் தன்மானம் மற்றும் நடவடிக்கை கோரிக்கை இப்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணி கட்சிகளிடையே இத்தகைய மோதல்கள் தொடரலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: அதிக திமிரை அடக்கணும்.. மதுரை வடக்கு தொகுதியில் போட்டி..! மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தல்..!