தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனப் போட்டித் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள சூழலில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு மாநில செயற்குழு அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கு 2,708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. இந்த 2,708 பணியிடங்களுக்கு மொத்தம் 42,064 பேர் தேர்வுகளை எழுதியிருந்தனர். இதில் 5 பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளில் தான் நம்ப முடியாத அளவிற்குப் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்பட்ட இந்தத் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களையும், மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும். முதல் தாளின் 'ஏ' பகுதியில் தேர்வர்களின் தமிழ்மொழிப் புலமையை அறிவதற்காக 50 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன. அதில் 40 விழுக்காடு (20 மதிப்பெண்கள்) எடுத்து தேர்ச்சி பெற்றால் போதுமானது, அது தரவரிசைக்குக் கணக்கில் கொள்ளப்படாது. முதல் தாளின் 'பி' பிரிவில் தேர்வர்களின் விருப்பப்பாடத்திலிருந்து 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன. இரண்டாவது தாளில் கொடுக்கப்படும் 5 பொது அறிவு மற்றும் சமூக அறிவியல் சார்ந்த தலைப்புகளில், ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து 50 மதிப்பெண்களுக்குக் கட்டுரை எழுத வேண்டும். இத்தேர்வுகளில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 40 விழுக்காடு மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 35 விழுக்காடு மதிப்பெண்களும் பெற வேண்டும் என்பது விதியாகும்.
இதையும் படிங்க: TNGASA 2026: விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் போர்ட்டல் ஓபன்!
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்போதைய முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முதல் தாளின் 'பி' பிரிவில் 111 மதிப்பெண்கள் (74 விழுக்காடு) பெற்ற பல தேர்வர்களுக்கு, இரண்டாவது தாளின் கட்டுரையில் பூஜ்ஜியம் (0) மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம், வரலாறு, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் கேட்கப்படும் 5 வினாக்களில் தங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு தலைப்பில் தான் தேர்வர்கள் கட்டுரை எழுதுவார்கள். அப்படி எழுதப்படும் கட்டுரைக்கு, அதுவும் விருப்பப்பாடத்தில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவரால் எழுதப்படும் கட்டுரைக்கு, பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைப்புக்குப் பொருத்தமான ஓரிரு தகவல்களை எழுதினால் கூட குறைந்தது 5 அல்லது 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். முனைவர் பட்டம் (Ph.D) பெற்ற ஒருவர், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு எதுவுமே தெரியாதவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
மறுபுறம், முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இரண்டாம் தாளில் 98 விழுக்காடு மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது இயல்பானதாகத் தெரியவில்லை. இது தற்செயலாக நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டுச் செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் முதன்முறையாக நியமிக்கப்படுகின்றனர். இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும், தகுதியுடையவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்வெழுதிய பல்லாயிரக்கணக்கானோரின் நம்பிக்கை தற்பொழுது சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து அரசு உடனடியாக விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!