ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!
சென்னை அருகே சிக்னல் விளக்கை துணியால் மறைத்துக்கட்டி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்தி பெண் பயணியிடம் தங்க நகையைப் பறித்த ஆட்டோ ஓட்டுநரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை அருகே நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை திட்டமிட்டு நடுவழியில் நிறுத்தி, பெண் பயணியிடம் தங்க நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநரான ஒருவரை ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு தினசரி இயக்கப்படும் நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், கடந்த 15-ம் தேதி இரவு வழக்கம்போல் தனது பயணத்தை தொடங்கியது. ரெயில் காட்டாங்கொளத்தூர் மற்றும் பொத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக கருதப்பட்டதால் நடுவழியில் நின்றது. அதே நேரத்தில் எதிர்திசையில் வந்த மற்றொரு ரெயிலும் சிக்னல் தெளிவாக தெரியாத காரணத்தால் வேகத்தை குறைத்து இயக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரண்டு தண்டவாளங்களிலும் இருந்த சிக்னல் கம்பங்களில் பச்சை நிற விளக்கு எரியும் பகுதி துணியால் மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் சிக்னல் தெரியாத நிலையை உருவாக்கி ரெயிலை நிறுத்தியிருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: டெண்டர் முறைகேடு! ரூ.1,800 கோடி ஒப்பந்த பாக்கி முடக்கம்!! அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
இதையடுத்து அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணியில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் இருப்பதை கண்டறிந்தனர். ரெயில் நின்றிருந்த நேரத்தில் அவர் பெண் பயணியிடம் இருந்து தங்க நகையை பறித்துச் சென்றதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய தொடர்ந்து தேடுதல் வேட்டையில் குமரேசன் கைது செய்யப்பட்டார். பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் அவர், இரவு நேரங்களில் ரெயில் பயணிகளை குறிவைத்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சிக்னல்களை சேதப்படுத்தி அல்லது மறைத்து ரெயில்களை நிறுத்தி, பயணிகளின் உடைமைகளை பறிப்பது அவரது வழக்கமான செயல்முறையாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குமரேசன் மீது கொருக்குப்பேட்டை, சென்னை சென்ட்ரல், ராயபுரம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் ஏற்கனவே வழிப்பறி மற்றும் திருட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், தாம்பரம் ரெயில்வே போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!