×
 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பர்தா அணிந்து கைவரிசை! மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பெண்கள் கைது!

ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்திருந்த மூன்று பெண்கள் மூதாட்டியை நெருங்கி செல்வது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்ததாக கூறப்படும் பெண்கள் கும்பலைச் சேர்ந்த இருவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த பாப்பாத்தி, 61, கடந்த 4ஆம் தேதி சொந்த அலுவல் காரணமாக சென்னை வந்திருந்தார். பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்று கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோடு செல்வதற்காக காத்திருந்தார். நடைமேடையில் அமர்ந்திருந்த அவர், ரயில் நிலையத்துக்குள் ரயில் வந்ததும் எழுந்து நின்றுள்ளார்.

அப்போது ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்ற நிலையில், ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பாப்பாத்தி அணிந்திருந்த சுமார் 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இனி தனி கட்டுப்பாடு! இந்து சமய அறநிலையத்துறையில் தமிழக அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்திருந்த மூன்று பெண்கள் மூதாட்டியை நெருங்கி செல்வது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், பெரியமேடு பகுதியில் பதுங்கியிருந்த மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பாரதி, 70, மற்றும் பூஜா, 28, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பாரதி கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பல ஆண்டுகளாக இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தலைமறைவாக உள்ள மூன்றாவது பெண்ணை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பல் தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் கைவரிசை காட்டியுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டி நிதியில் விதிமீறல்?! மக்கள் பணத்தில் கார், டிவி வாங்கி குவிப்பு?! CAG அறிக்கையில் பகீர் தகவல்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share