கடலூரில் நகைக்காக மூதாட்டி ஒருவரை கொலை செய்து, அவரது காது மற்றும் மூக்கை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்ததும், அவற்றை அப்படியே விட்டுவிட்டு கொலையாளி தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையின் வாசலில் பெண் ஒருவர் தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்குச் சொந்தமாக வீடு எதுவும் இல்லாததால், கடலூர் மார்க்கெட் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் தொடர்ந்து தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!
நேற்று இரவும் அந்த மூதாட்டி நகைக்கடை வாசலைப் பெருக்கிவிட்டு, அங்கேயே தூங்கியுள்ளார். இந்த நிலையில், இன்று காலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
மேலும், மிகவும் கொடூரமான முறையில் அவரது காது மற்றும் மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது, அந்த மூதாட்டியின் காது மற்றும் மூக்கில் இருந்த நகைகளும், கழுத்து மற்றும் கைகளில் அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருந்தது தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் சோதனை செய்தபோது, அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மூதாட்டி அணிந்திருந்த நகைகள் தங்க நகைகள் என்று நினைத்து அவரை கொலை செய்துவிட்டு, நகைகளை எடுக்க முயன்றபோது அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கவரிங் நகைகள் என்பது தெரிந்ததும், அவற்றை அப்படியே விட்டுவிட்டு கொலையாளி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த மூதாட்டியை கொலை செய்தது யார், எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்க நகை என்று நினைத்து மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?