தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டம் துருக்கியில் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் தேசிய விசாரணை அமைப்பு (என்ஐஏ) விசாரணையில் வெளியாகியுள்ளது.
என்ஐஏ அதிகாரிகள் இந்த சம்பவத்துக்கான அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக, தாக்குதல் திட்டம் எங்கு தீட்டப்பட்டது, யார் யாருடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை ஆராய்ந்தனர். இதில் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
குண்டுவெடிப்பில் ஈடுபட்ட மருத்துவர்கள் இரண்டு டெலிகிராம் குழுக்கள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த இரு குழுக்களும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவை. ஒன்று பர்சான்தான்-இ-தாருல் உலும் என்ற குழு. மற்றொன்று பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-மொஹமது அமைப்பின் கமாண்டர் உமர் பின் கட்டாப் நடத்தும் குழு. இந்த இரு குழுக்களிலும் தாக்குதலில் ஈடுபட்ட டாக்டர் உமர் நபி, சோபியானைச் சேர்ந்த இமாம் இர்பான் அகமது வாஹா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோழைத்தனமான தாக்குதல்!! இந்தியா திரும்பியதும் ஆக்சனில் இறங்கிய மோடி!! அமைச்சரவையில் கர்ஜனை!!
இந்த உரையாடல்கள் முதலில் “காஷ்மீர் ஆசாதி” மற்றும் “காஷ்மீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள்” என்ற தலைப்புகளில் தொடங்கின. பின்னர் அவை சர்வதேச பயங்கரவாதம், உலகளாவிய ஜிகாத், பழிவாங்கல் என்ற திசையை நோக்கி சென்றன.

இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். குறிப்பாக துருக்கிக்குச் சென்று சிலரைச் சந்தித்துள்ளனர். துருக்கி பயணத்துக்குப் பிறகே இந்தியாவில் தங்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளனர். டாக்டர் முசாம்மில் ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மற்றொரு டாக்டர் அடில் உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் பணியில் அமர்த்தப்பட்டார்.
இவர்கள் ஆட்களைச் சேர்ப்பது, வெடிபொருட்களை வாங்கி ஒன்று சேர்ப்பது, தளவாடங்களை பல மாநிலங்களுக்கு கொண்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நெட்வொர்க்கில் டாக்டர்கள் உமர், முசாம்மில், ஷாஹீன் உள்ளிட்ட 5 முதல் 6 மருத்துவர்கள் உட்பட 9 முதல் 10 பேர் இருந்துள்ளனர். இவர்கள் தங்கள் மருத்துவர் அடையாளத்தைப் பயன்படுத்தி வெடிபொருட்களை வாங்கியுள்ளனர்.
என்ஐஏ இந்த அனைவரையும் அடையாளம் கண்டுள்ளது. தாக்குதல் நடந்த நாளில் (நவம்பர் 10) மதியம் 3 மணி முதல் மாலை 6:30 மணி வரை டாக்டர் உமர் யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை அறிய, செங்கோட்டை பகுதியில் உள்ள செல்போன் டவர்களை என்ஐஏ ஆராய்ந்து வருகிறது.
இந்த விசாரணை துருக்கி வரை நீண்டுள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு ஒரு தனி சம்பவம் அல்ல, சர்வதேச பயங்கரவாத நெட்வொர்க்கின் ஒரு பகுதி என்பது தெளிவாகியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு அரோகரா போட்ட மாதிரி நைனாருக்கும் பார்சல் ரெடி..! அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்…!