சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) கூட்டணி விவகாரம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தேமுதிகவின் வாக்கு வங்கி மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டு, இரு கூட்டணிகளும் அதிக சீட்கள் வழங்க தயாராக உள்ளன.
அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு 8 சட்டமன்ற தொகுதிகள் வரை ஒதுக்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக தரப்பில் 21 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் ஒரு மத்திய அமைச்சர் பதவி என கடுமையான கோரிக்கைகளை முன்வைத்து பேரம் நடத்தி வருகின்றனர். இதனால் அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) தேமுதிக இணைவதில் இழுபறி நீடிக்கிறது.
இதையும் படிங்க: தேமுதிக பக்கா ப்ளான்!! கூட்டணி அறிவிக்காததன் அசத்தல் பின்னணி! யாருக்கு கல்தா?!
திமுக தரப்பில் பிரேமலதாவிடம் 7 சட்டமன்ற தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக 10 சட்டமன்ற தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவல் பரவியுள்ளது. காங்கிரஸ் மேலிடம் இதுவரை முடிவு எதுவும் அறிவிக்காத நிலையில், ஒருவேளை ராகுல் காந்தி தவெகவுடன் கூட்டணி என்று அறிவித்தால், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு கூடுதல் சீட்கள் கிடைக்கும் என்று பிரேமலதா நம்புகிறார். இந்த ஆசையால் தான் கூட்டணி முடிவை தாமதப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜனவரி 23) மதுராந்தகத்தில் நடக்கவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க வைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று பாஜக தரப்பில் சிலர் பிரேமலதாவிடம் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியானாலும், அதை பிரேமலதா மறுத்துவிட்டார். இதன்மூலம் காங்கிரஸ் முடிவை எதிர்பார்த்து தேமுதிக காத்திருப்பது தெளிவாகிறது.
தேமுதிகவின் முடிவு தமிழக தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிகவுக்கு உள்ள செல்வாக்கு காரணமாக, எந்த கூட்டணியில் இணைந்தாலும் அது அந்த கூட்டணிக்கு வலிமை சேர்க்கும்.
பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சியின் வாக்கு வங்கியை பயன்படுத்தி அதிகபட்ச பலனை பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகிறார். மோடியின் மதுராந்தகம் கூட்டத்தில் தேமுதிக தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது இன்றைய அரசியல் விவாதமாக உள்ளது.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? பியூஷ் கோயலுடன் சந்திப்பா? பிரேமலதா விஜயகாந்த் பிரஸ் மீட்..!