தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக (தே.மு.தி.க.) கூட்டணி முடிவு தொடர்ந்து சஸ்பென்ஸை ஏற்படுத்தி வருகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்னும் எந்த அணியுடன் இணைவது என்பதை தெளிவாக அறிவிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக வரலாற்றை பார்த்தால், கட்சி தொடங்கிய 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு விருத்தாசலத்தில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2011-ல் அதிமுக கூட்டணியில் 29 தொகுதிகளில் வென்று பெரும் வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க: மகனுக்காக முட்டி மோதிய பிரேமலதா! பிடிகொடுக்காத எடப்பாடி! தேஜ கூட்டணி கேட் க்ளோஸ்! தேமுதிக நிலை?!
ஆனால் அதற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 2014, 2016, 2019, 2021 தேர்தல்களில் பல்வேறு அணிகளுடன் இணைந்தும் வெற்றி கிடைக்கவில்லை. 2021-ல் திமுகவுடனும் அதிமுகவுடனும் பேசி இருவராலும் நிராகரிக்கப்பட்டு, அமமுக உடன் இணைந்து தோல்வியடைந்தது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கிடைத்தாலும், விஜய பிரபாகரன் விருதுநகரில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோற்றார்.

அண்மையில் ஜனவரி 9-ஆம் தேதி கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு என்று பிரேமலதா கூறியிருந்தார். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை. அதிமுகவிடம் 17 தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் கேட்டதால் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திமுகவுடன் ரகசிய பேச்சு நடந்து, 6 தொகுதிகள் + ராஜ்யசபா ஒன்று என்ற ஒப்பந்தம் இறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, நேற்று பிரேமலதா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். 2011-ல் விஜயகாந்த் அதே கோவிலில் வழிபட்ட பிறகு அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார். அதேபோல தனக்கும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரேமலதா இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.
தேமுதிக தொண்டர்கள் இப்போது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். திமுக அணியில் இணைந்தால் கட்சிக்கு புதிய உயிர் கிடைக்குமா? அல்லது மீண்டும் தனித்து போட்டியிடுமா? பிரேமலதா விரைவில் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு 2026 தேர்தல் கணக்குகளை மாற்றி அமைக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: அண்ணி இல்லை!! இனிமேல் அம்மா!! தேமுதிகவை வழிநடத்த பிரேமலதா புதுரூட்! கேப்டன் பணி தொடரும்!