தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் உயர் கல்வித் துறை அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான கோவி செழியன், 2026 தேர்தலை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இந்தத் தொகுதியில் மொத்தம் 2.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செழியன், இம்முறையும் இங்கேயே போட்டியிட விரும்புகிறார். அதற்காக, ஒவ்வொரு வாக்காளரையும் கவரும் வகையில் பிரமாண்டமான “பரிசு வினியோகத் திட்டத்தை” கடந்த இரு மாதங்களாக தீவிரமாக நடத்தி வருகிறார்.
தொகுதி முழுவதும் டிராக்டர்கள், வேன்கள் மூலம் சில்வர் டிரம்கள் (வெள்ளி பூசிய பாத்திரங்கள்) மற்றும் புடவைகள் கொண்டு செல்லப்படுகின்றன. அவை திமுக நிர்வாகிகள் மூலம் வீடு வீடாக வழங்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கோவி செழியன் ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுவரை தொகுதியில் உள்ள 90 சதவீத வாக்காளர்களுக்கு இந்தப் பரிசுப் பொருட்கள் சென்றடைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் சலுகைகள் தாராளம்! கொட்டிக் கொடுக்க திட்டம்!! கோட்டையில் நடக்கும் தொடர் ஆலோசனை!

வேடிக்கை என்னவென்றால், எதிர்க்கட்சியான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்தப் பரிசுகளை வாங்கியுள்ளனர். பரிசு கிடைக்காத சிலர், திமுக நிர்வாகிகளைத் தேடி வந்து “எங்களுக்கும் கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தொகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இந்தப் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது? வருமான வரித் துறை சோதனை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். தேர்தல் நேரத்தில் இது வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சி என்று தேர்தல் ஆணையமும் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
திமுக வட்டாரங்கள் இதை “மக்கள் நலப் பணி” என்று கூறினாலும், எதிர்க்கட்சியினர் “வாக்காளர்களை விலைக்கு வாங்கும் திட்டம்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் நிலையில், திருவிடைமருதூரில் ஏற்கனவே “பரிசு வினியோக யுத்தம்” தொடங்கிவிட்டது.
இதையும் படிங்க: இந்தவாட்டி பனையூர்ல ரூம் போடுங்க!! விஜயை வளைக்க பாஜக திட்டம்!! அமித்ஷா கொடுத்த ஆர்டர்!