தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய துறையான நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் அதன் அமைச்சரான கே.என்.நேருவைச் சுற்றி எழுந்துள்ள 1,020 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை, தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள 252 பக்க ரகசிய ஆவணங்கள், ஆளுங்கட்சியின் தூக்கத்தைக் கலைத்துள்ளன
இந்த விவகாரத்தின் தொடக்கமே ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த வங்கி மோசடி சோதனையில்தான் ஆரம்பித்தது. அங்கு கிடைத்த ஆவணங்கள், நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த வேலைவாய்ப்பை விற்பனையாக்கியது அம்பலமாக்கி விட்டன. 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில், தகுதியை விட பணமே பிரதானமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 150 பேரிடம் மட்டும் தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டியுள்ளது. அதிகாரமிக்க அரசியல்வாதிகளும், அவர்களுக்கு நெருக்கமான 'நிழல்' நிறுவனங்களும், அதிகாரிகளும் இந்த வசூல் வேட்டையில் முக்கியப் பங்காற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முறைகேடு ஒருபுறம் இருக்க, மறுபுறம் டெண்டர்களில் அமைச்சரின் உறவினர்கள் மூலமாக வசூலிக்கப்பட்ட 7.5% முதல் 10% வரையிலான கமிஷன் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெண்டர்கள் விடப்படுவதற்கு முன்பே, யாருக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் நேருவின் விருப்பப்படி விதிகள் வளைக்கப்பட்டு, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக டெண்டர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு... ஓட்டு போடுங்க மக்களே..!! திருச்சியில் கே.என்.நேரு பரப்புரை..!!
இந்த ஊழல் பணம் வெறும் தனிநபர் கைக்கு மட்டும் செல்லாமல், கட்சி நிதி என்ற பெயரில் முறைகேடாகத் திரட்டப்பட்டிருப்பதாகவும், இதற்காக ஹவாலா பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை சாட்டையைச் சுழற்றியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் என டிஜிட்டல் ஆதாரங்கள் மலைபோலக் குவிந்துள்ளன.
அமைச்சர் நேருவின் மீது புகார் பாய்ந்துள்ள அதே வேளையில், இந்த ஊழலுக்குத் துணை நின்றதாகக் கூறப்படும் உயர்மட்ட அதிகாரிகளின் பெயர்களும் அடிபடுகின்றன. குறிப்பாக, நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் டி.கார்த்திகேயன் ஐஏஎஸ், சி.எம்.ஏ மதுசூதனன் ரெட்டி ஆகியோர் இந்த விவகாரத்தில் சிக்கக்கூடும் என்கிற தகவல்கள் பகீர் கிளப்புகின்றன. இதில் மதுசூதனன் ரெட்டி தான் பணத்தை வசூலித்துக் கொடுப்பதில் முன்னிலை வகித்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை தனது கடிதத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. "இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், காவல்துறையும், நகராட்சித்துறை அதிகாரிகளும் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாகக் கருதப்படும்" என்று தெரிவித்துள்ளது. அதாவது, மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அமலாக்கத்துறை நேரடியாகக் களத்தில் இறங்கி அடுத்தடுத்த அதிரடி கைதுகளை நடத்தும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
திமுக அரசுக்கு, தேர்தல் நேரத்தில் கே.என்.நேரு மீதான இந்தப் புகார் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 1,020 கோடி ரூபாய் ஊழல் புகார் என்பது வெறும் அரசியல் குற்றச்சாட்டாக மட்டும் இல்லாமல், சட்டரீதியான நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது. அது கே.என்.நேருவுக்கு மட்டுமல்ல, கார்த்திகேயன், மதுசூதனன் ரெட்டி போன்ற அதிகாரிகளுக்கும் வைக்கப்பட்ட பொறி என அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் நேரு மீதான முறைகேடு விவகாரம்... அரசு அனுமதிக்கு வெயிட் பண்ணனுமா? லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்..!!