காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தியா எப்போது பதிலடி கொடுக்குமோ என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான், தினசரி ஏதாவது ஒன்றைச் செய்து வருகிறது. பாகிஸ்தான் அரசு தன் தரப்பில் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . எந்த நேரத்திலும் இந்தியா எல்லையில் தாக்குதலை தொடங்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக பாகிஸ்தானை சேர்ந்த பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: மக்களை தூண்டி விடும் கன்டென்ட்டுகள்... பாக். பிரதமரின் யூடியூப் சேனலுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு!!

குறிப்பாக எல்லை பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இருக்கக்கூடிய கிராமங்களில் எல்லாம் மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளிகள் அனைத்து மூடப்பட்டு அவை அனைத்தும் பயிற்சி மையங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் எப்படி தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது, முதலுதவி செய்வது என்பன உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கிராமங்களில் எல்லாம் பங்கர் அமைத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அனைவருக்கும் உணவு, மருந்து மற்றும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3.5 மில்லியன் டாலர்கள் பணத்தை தயாராக வைத்திருக்கிறதாம். நீளம் வேலி உள்ளிட்ட பாகிஸ்தானின் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்ச உணர்வே இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் ரகசிய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்... வழிகாட்டும் அமெரிக்கா..!