தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். இந்தப் பிரம்மாண்டமான பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இன்று காலை மயிலாப்பூர் வந்தடைந்த எடப்பாடியார், கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் சன்னதிகளில் மனமுருகி வேண்டினார். 2026 தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன், இறைவனின் ஆசியைப் பெற்றுத் தனது முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்றார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும், அதிமுக தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!
வழிபாட்டை முடித்துவிட்டு மயிலாப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் கடந்த காலச் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். 2026 தேர்தல் என்பது தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் போர் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.,
இன்று காலையே அதிமுகவின் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டிருந்தார். அதில் எடப்பாடி தொகுதியில் தாமே போட்டியிடுவதையும், 20 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதையும் அவர் உறுதி செய்தார். மயிலாப்பூரில் தொடங்கியுள்ள இந்த வெற்றிப் பயணம், வரும் நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தொடர உள்ளது.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு எதிராக அதிமுக போர்க்கொடி! மார்ச் 17-ல் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!