திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு, உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தற்போது நேரில் ஆஜராக இயலாது என்றும், சிகிச்சை முடிந்ததும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சாலைகள் அமைக்காமல் அமைத்ததாகக் கணக்குக் காட்டி, அரசு நிதியில் ரூ.23.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அரப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில், அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 பேர் மீது சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் குதிரை பேரம் விவகாரம்..! முன்ஜாமீன்.? அசோக் குமார் மனு மீது ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
இதையடுத்து, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. அவரது சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காவல்துறை மூலம் சம்மன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எ.வ. வேலு தனது வழக்கறிஞர் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை தொடர்பாக இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டதை அறிந்தேன். ஆனால் தற்போது சிங்கப்பூரில் உள்ள Lifeline Heart Centre மருத்துவமனையில் மருத்துவர் டாக்டர் ஜெயராம் லிங்க நாயக்கர் மேற்பார்வையில் இதய நோய்க்கான தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் எனக்கு 10 நாட்கள் சிகிச்சை அவசியம் என அறிவுறுத்தியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சிகிச்சை நிறைவடைந்ததும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவச் சான்றிதழையும் அவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மருத்துவ அறிக்கையில், எ.வ. வேலுவுக்கு இஸ்கிமிக் இதய நோய், நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தோல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான மருத்துவ ஆலோசனைக்காக அவர் கடந்த 26-ஆம் தேதி சிங்கப்பூர் சென்றதாகவும், 27-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் வழங்கப்பட்டுள்ள சான்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவச் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் எ.வ. வேலு தனது கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.
இதனால், மருத்துவச் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் சுமார் 10 நாட்களுக்குள் எ.வ. வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணையும் திருச்சி சிவா மகள்! கணவரும், அப்பாவும் திமுக! தவெகவில் புதுவரவு!