சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் 3-வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கையைத் தமிழகத்தின் தற்போதைய தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசு எதிர்க்காதது குறித்து, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தவெக அரசிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதே தவறு என்று சாடியுள்ளார்.

மொழி என்பது எந்தவொரு குழந்தைக்கும் ஒரு பாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இதனால்தான், தமிழகத்தில் தொடர்ந்து நாங்கள் தெளிவாகச் சொல்லி வருவது இருமொழிக் கொள்கையை மட்டும்தான். ஆனால், தற்போதைய தவெக அரசு, மத்திய அரசை எதிர்த்து எதையுமே பேசுவதில்லை என்ற ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அரசிடமிருந்து மொழியுரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதே இங்கு ஆகப்பெரிய தவறு.
இதையும் படிங்க: சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

மத்திய அரசு பல்வேறு வழிகளில் மும்மொழிக் கொள்கையைப் புகுத்த முயன்றாலும், தமிழகத்தின் பாரம்பரியமிக்க இருமொழிக் கொள்கையைக் காப்பதில் திமுக என்றும் உறுதியாக நிற்கும் என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தவெக அரசு சட்டம் ஒழுங்கு முதல் மொழியுரிமை வரை அனைத்திலும் மத்திய அரசுக்கு இணக்கமாகச் செல்வதாக திமுக தரப்பில் வைக்கப்படும் தொடர் குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாகவே கனிமொழியின் இந்த அதிரடிப் பேட்டி பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!