அமெரிக்காவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான H-1B விசா உள்ளிட்ட பணி விசாக்களில் வேலை இழந்த பிறகு கிடைத்து வந்த 60 நாள் சலுகைக் காலத்தை (கிரேஸ் பீரியட்) ரத்து செய்யும் முன்மொழிவை டிரம்ப் நிர்வாகம் முறையாக வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேற்றங்களை முழுமையாகத் தடுக்கும் அதே வேளையில் சட்டப்பூர்வக் குடியேற்றங்களையும் கடுமையாகக் கட்டுப்படுத்தும் கொள்கையை முன்னிறுத்தி வருகிறார்.
“அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்ற அவரது நிலைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள், அமெரிக்காவில் பணிபுரியும் மற்றும் பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டினருக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு முன்னர் விசாக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதுடன், இமிகிரண்ட் விசா நேர்காணல்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் உள்துறை பாதுகாப்புத் துறை (DHS) வெளியிட்டுள்ள புதிய முன்மொழிவின்படி, H-1B, L-1, O-1, E மற்றும் TN போன்ற பணி விசாக்கள் வைத்திருப்பவர்கள் வேலையை இழக்கும் போது, உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த 60 நாள் சலுகைக் காலம், புதிய வேலை தேடுவதற்கோ அல்லது குடும்பத்துடன் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கோ அவகாசம் அளித்து வந்தது.
இதையும் படிங்க: ஈரான் போர் முடிவுக்கு வருமா..?? அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதில்..!!
இந்த அவகாசம் நீக்கப்பட்டால், வேலை முடிந்த மறுநாளே அந்தஸ்தை இழந்தவராகக் கருதப்படுவர்.அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் H-1B விசாவைப் பயன்படுத்திப் பணிபுரிபவர்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக உள்ளனர். டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட்ட்ரீ போன்ற இந்திய நிறுவனங்களும், டெலாய்ட், பிடபிள்யூசி, ஈஒய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இந்த விசாவை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.

ஆண்டுதோறும் சுமார் 3,795 தொழிலாளர்கள் இந்த சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி புதிய வேலை தேடுவதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதனால் பாதிக்கப்படக்கூடிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு பெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உள்துறை பாதுகாப்புத் துறை கருத்துகளை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களுடன் இறுதி விதியை வெளியிடும். இருப்பினும் பாதிக்கப்படுவோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை பெற வாய்ப்புள்ளது. தற்போது இந்த விதி அமலுக்கு வரவில்லை; முன்மொழிவு நிலையிலேயே உள்ளது.
இதையும் படிங்க: பாரன் டிரம்ப் தலைக்கு ரூ.95 கோடி பரிசு!! டிரம்ப் குடும்பத்தை அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!