தமிழகத்தில் மகளிருக்கு அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயண வசதியை அமல்படுத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிதி, பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய அரசு போக்குவரத்துக் கழகங்கள் விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளன.
தமிழக போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தற்போது 21,527 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தேர்தலின்போது அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயண வசதி வழங்கப்படும் என்று ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
இந்த வாக்குறுதியை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் 16-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, ஒவ்வொரு போக்குவரத்துக் கழகமும் தனித்தனியாக விரிவான ஆய்வு அறிக்கையை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் ரூ.100 கோடி மோசடி! பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற லஞ்சம்! சிக்கிய முக்கிய புள்ளி!

போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், தற்போது அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களில் 62 முதல் 64 சதவீதம் வரை பெண்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள மகளிர் இலவச பயணத் திட்டத்திற்காக மாதந்தோறும் சுமார் ரூ.16 கோடி அரசு வழங்கி வருகிறது.
இந்தத் திட்டம் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டால், கூடுதலாக எவ்வளவு நிதி தேவைப்படும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு ஈடுகட்டலாம், மாற்று வருவாய் ஆதாரங்களை உருவாக்க முடியுமா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தயாராகும் அறிக்கைகள் விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறைப்படுத்தும் கால அட்டவணை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் தொடர்பான முழுமையான அறிவிப்பு, விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மகளிர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்தத் திட்டம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி! பதறிப்போன இளம்பெண்! தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!