தெற்கு கொலம்பியாவில் உரிமம் இல்லாத சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் போலிகார்பா பகுதியில் திறந்தவெளி தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த உடனேயே தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். உள்ளூர் மக்களும் கனரக இயந்திரங்கள் மூலம் உதவினர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சுரங்கம் சட்டவிரோதமாக இயக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற சட்டவிரோத தங்கச் சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை, ஆயுதக் குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சுரங்கத்தின் அடித்தளத்தைப் பலவீனப்படுத்திய "முறையற்ற அகழ்வாராய்ச்சியே" இந்தச் சரிவுக்குக் காரணம் என்று ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. செங்குத்தான நிலப்பரப்பும் நிலையற்ற தரையும் மீட்புப் பணிகளுக்குத் தடையாக உள்ளன. ஈக்வடாரை ஒட்டியுள்ள நைரினோ பகுதி, சட்டவிரோத சுரங்கத் தொழிலின் மையமாக மாறியுள்ளது. ஆயுதக் குழுக்களால் நடத்தப்படும் சட்டவிரோத தங்க வர்த்தகத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அச்சுறுத்தல்களும் அப்பகுதியில் பரவலாக உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம்...கொலம்பியாவை உலுக்கிய ரிக்டர் 7.4 நிலநடுக்கம்... 100க்கும் மேற்பட்டோர் பலி...!
நேற்று மதியம் தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே செல்வதற்கு முன்பாக திறந்தவெளியில் இருந்த மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தில் இருந்த உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாகவே சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், உள்ளே இருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணில் புதைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் தோண்டும் இயந்திரங்களின் உதவியுடன் உடல்களை மீட்டனர்.
கொலம்பியாவில், குறிப்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ மேற்பார்வையுமின்றி உள்ளூர் மக்கள் விலையுயர்ந்த உலோகங்களைத் தோண்டி எடுக்கும் உரிமம் இல்லாத சுரங்கங்களில், உயிரிழப்பு விபத்துகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இறந்த 13 பேரில் நான்கு பேர் ஒரே பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று சாட்சிகள் தெரிவித்தனர்.
தெற்கு நாரினோ மாகாணத்தில் உள்ள போலிகார்பா அருகே இருக்கும் சுரங்கத்தில், பெரும்பாலும் குயிலாசிங்கா பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் தொடர்ந்து பணிபுரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கொலம்பியாவில் 200,000 முதல் 400,000 வரையிலான மக்கள் பாரம்பரிய சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல குடும்பங்கள் தாங்கள் கண்டெடுக்கும் விலைமதிப்புள்ள உலோகங்களையும் கற்களையும் விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்கின்றன.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!