திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வு அரசுக்குத் தெரியாமல் நடைபெற்ற ஒன்று என்றும், அதற்காக இடதுசாரித் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் சி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்துக் கட்சியின் தலைமைதான் இறுதி முடிவை எடுக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட குழுவினர் இன்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மதிமுக தலைமை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்தனர். வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக ஆதரவுக் கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தியாகராயர் நகரில் உள்ள சிபிஎம் மாநில தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் மூத்த நிர்வாகி கே.சண்முகம் உள்ளிட்டோரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.நிர்மல்குமார், தற்போது நிலவி வரும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் மற்றும் சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஆகியவை தொடர்பாக தோழர் சண்முகம் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினோம்.
இதையும் படிங்க: முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?
மேலும், குஜிலியம்பாறை நிகழ்வு அரசுக்குத் தெரியாமல் களத்தில் எதிர்பாராமல் நடைபெற்றது. அதுகுறித்து இடதுசாரித் தலைவர்களிடம் எங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்காமல் முழுமையாகப் பார்த்துக் கொள்வோம் என உறுதியளித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தியாகராயர் நகரில் உள்ள சிபிஐ மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன், அவர்கள் எங்களை அமைச்சர்களாகச் சந்திக்க வரவில்லை; தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிர்வாகிகளாகவே சந்தித்தார்கள்.
இந்தச் சந்திப்பில் நாங்கள் வெளிப்படையாக அரசியல் பேசினோம். மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜனநாயக விழுமியங்களை அப்பட்டமாக மீறி வருவதையும், நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதையும் விரிவாக உரையாடினோம். மக்கள் அளித்த தீர்ப்பிற்கு மதிப்பளித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகார மையத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இடதுசாரிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தோம்.
நாங்கள் அமைச்சரவையிலோ அல்லது தேர்தல் கூட்டணியிலோ இடம்பெறவில்லை; மக்கள் நலனுக்காக வெளியில் இருந்து ஆதரிப்பதனாலேயே அரசின் தவறுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து களத்தில் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய கட்சி; அவர்கள் முழுமையான மதச்சார்பின்மையை நோக்கி நகரும் வரை மக்கள் நலன் சார்ந்த எங்களது ஆக்கப்பூர்வ விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைப்போம்.
வரும் செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள தவெகவின் இரண்டாவது ஆதரவுக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; அதில் கலந்து கொள்வதா என்பது குறித்து எங்கள் கட்சி தலைமைதான் கூடி முடிவெடுக்கும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!