ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து மாநிலம் முழுதும் கனமழை பெய்கிறது. மலைப்பாங்கான பகுதிகளில், நிலச்சரிவும், நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குலு, மணாலி, ஷிம்லா உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் சாலை அரிப்பு மற்றும் வெள்ளத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மண்டி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால், பலரது வீடுகள் இடிந்து விழுந்தன.
மாநிலம் முழுதும் தீவிரம் அடைந்துள்ள பருவமழையால் கடந்த 36 மணி நேரத்தில் 10 பேர் பலியாகினர், காணாமல் போன 34 பேரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஷிம்லாவில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த சாலை பணிகளின் போது ஏற்பட்ட மண் அரிப்பால், அங்குள்ள 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது.
அதை சுற்றிய பகுதிகளில் மேலும் 5 கட்டடங்கள் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டன. ஹமீர்பூரின் பல்லா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 30 தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட 51 பேர் சிக்கினர். அவர்கள் அனைவரும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்கள்..!

கடந்த மாதம் 20ம் தேதி துவங்கிய பருமழையால், பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கங்கராவில் 13 பேர், மண்டி மற்றும் சம்பாவில் தலா 6 பேர், கின்னவுர், உனா, ஷிம்லாவில் தலா 4 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுதும் 204 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கால்நடை பராமரிப்பு மையங்கள், கடைகள் என 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனியார் சொத்துக்களும், 280 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு சொத்துக்களும் நாசமாகியுள்ளன.

மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், மாநில அரசு அதிகாரிகள் என பலரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மிக தலங்களுக்கு செல்லும் பாதைகள் கடும் சேதம் அடைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் கவனத்துடன் பயணிக்கும் படி அரசு அறிவுறுத்தி உள்ளது. பல இடங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டு, பல மெகா சைஸ் பள்ளங்கள் தோன்றியுள்ளன.

இன்னும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயங்கர மேகவெடிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மண்டியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிலாஸ்பூரில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நேரில் பார்வையிட்டார். மத்திய அரசு நிதியை ஹிமாச்சல பிரதேச அரசு சரியாக பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்
இதையும் படிங்க: போன வருஷமே தாங்கல.. மறுபடியுமா..! வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு.. பீதியில் மக்கள்..!