ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் சிறைச் சூழல் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சல்மான் சஃப்தார், தனது அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கடந்த அக்டோபர் 2025 வரை இரண்டு கண்களிலும் 6 x 6 என்ற சீரான பார்வைத்திறன் கொண்டிருந்த இம்ரான் கானுக்கு, தற்போது வலது கண்ணில் 15 சதவீதப் பார்வை மட்டுமே எஞ்சியுள்ளது. இம்ரான் கானின் வலது கண்ணில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கண்ணின் நரம்புகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டி20 உலக கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் பச்சைகொடி - பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி உத்தரவு!
பார்வை மங்கத் தொடங்கிய போதே சிறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், அவர்கள் உரியச் சிகிச்சை அளிக்காமல் வெறும் 'ஐ டிராப்ஸ்' (Eye Drops) மட்டுமே வழங்கியதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். உரிய நேரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படாததே இந்தப் பார்வை இழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞருடனான சந்திப்பின் போது, இம்ரான் கானின் கண்கள் தொடர்ந்து நீர் வடிந்தபடியே இருந்ததாகவும், அவர் மிகுந்த வேதனையில் காணப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திடுக்கிடும் அறிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைமை நீதிபதி யாஹ்யா அஃப்ரிடி தலைமையிலான அமர்வு பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இம்ரான் கானின் பார்வைப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.
வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் இம்ரான் கானுக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். லண்டனில் வசிக்கும் தனது மகன்கள் காசிம் மற்றும் சுலைமானுடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேசுவதற்குச் சிறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.
இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் இந்த நிலைக்குச் சிறையில் அவருக்குக் கொடுக்கப்படும் தனிமைச் சிறை மற்றும் திட்டமிட்ட மருத்துவப் புறக்கணிப்புமே காரணம் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!