மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மறைவுக்கு இந்தியா இன்று தனது அதிகாரப்பூர்வ இரங்கலைத் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு கமேனி உயிரிழந்த நிலையில், இதுவரை மௌனம் காத்து வந்த இந்திய அரசு, தற்போது தனது வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய நகர்வை மேற்கொண்டுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று புது தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று, அங்கிருந்த இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். மேலும், ஈரான் தூதரைச் சந்தித்து இந்திய அரசின் சார்பில் தனது ஆறுதலைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். இந்தியா எப்போதும் இத்தகையப் பிணக்குகளுக்குப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் (Dialogue and Diplomacy) மூலமாகவே தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!
முன்னதாக, நட்பு நாட்டின் தலைவர் கொல்லப்பட்டும் இந்தியா மௌனம் காப்பது நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மையைச் சிதைக்கிறது என மூத்தத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்த அழுத்தங்களுக்குப் பின்னரே மத்திய அரசு இந்த இரங்கல் நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுவரை ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே கமேனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன. மற்ற உலக நாடுகள் மௌனம் காத்து வரும் நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. அதேசமயம், அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் தென்பட்டால் அவை நிச்சயம் தாக்கப்படும் என ஈரான் புரட்சிகரப் படை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது எரிசக்தித் தேவையில் ஒரு காலத்தில் 13 சதவீதத்தை ஈரானிடமிருந்து பெற்று வந்தது. தற்போதையச் சூழலில் ஈரானுடனானத் தனது நீண்டகால உறவைப் பாதுகாக்கும் அதே வேளையில், சர்வதேசச் சட்டங்களையும் மதிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது.
இதையும் படிங்க: அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்! விமான நிலையம், பள்ளிகள் மீது ட்ரோன்கள் வீச்சு!