புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், நாட்டின் எரிசக்தி கொள்முதல் கொள்கை முழுமையாக தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், 2022-ம் ஆண்டு மோதல் தொடங்கியதிலிருந்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. சர்வதேச அளவில் இந்த கொள்முதல் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தாலும், இந்தியா தனது எரிசக்தி தேவைகளை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுத்து வருவதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.
இந்த சூழலில் உக்ரைன் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறதா, இல்லையா என்பதால் மட்டும் உக்ரைன் போர் முடிவுக்கு வராது என்றும், பேச்சுவார்த்தை மூலமாகவே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியா எங்கிருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என கூறினார்.
மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் முடிவுகள் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாகவும், அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தி பொருட்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்முதல் கொள்கையை வழிநடத்தும் முக்கிய அம்சம் என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான இந்தியாவின் தற்போதைய அணுகுமுறையில் உடனடி மாற்றம் இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் பொதுமக்களின் தேவைகளும் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும் என வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் மோடி! அடுத்து கிர்கிஸ்தான்! 4 நாள் பயணத்தில் நடக்கப்போகும் முக்கிய சந்திப்புகள்!