இந்தியா–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என்ற அவரது தகவல், இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா–இந்தியா உத்திசார் கூட்டாண்மை தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய செர்ஜியோ கோர், இரு நாடுகளுக்கும் சமமான நன்மை அளிக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக கூறினார். ஒப்பந்தத்தின் பெரும்பாலான அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், எதிர்காலத்தில் அவர் மீண்டும் இந்தியா வருவார் என்று தாம் நம்புவதாகவும் செர்ஜியோ கோர் கூறினார். இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, உயர்தர தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

உலகின் பல நாடுகளை விட இந்தியா, அமெரிக்காவுக்கு முக்கியமான வர்த்தக கூட்டாளியாக தொடர்ந்து திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவை அமெரிக்க நிறுவனங்கள் நம்பகமான முதலீட்டு இலக்காக கருதுகின்றன என்றும், இந்தியாவில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா, சட்டங்கள் திடீரென மாறுமா அல்லது தொழில் செய்ய சிக்கல்கள் ஏற்படுமா என்ற அச்சங்களை தற்போது பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் எழுப்புவதில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கொள்கை வெளிப்படைத்தன்மை காரணமாக அமெரிக்க முதலீட்டாளர்களின் நம்பிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்தார். இதன் காரணமாக இரு நாடுகளும் தொழில்நுட்பம், உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் புதுமை சார்ந்த துறைகளில் நீண்டகால கூட்டாண்மையை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், இந்தியா–அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தி, அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கையையும் செர்ஜியோ கோர் வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் மீண்டும் மோதல்! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!! போர் பதற்றம்!