அமெரிக்காவை எதிர்த்தா எனக்கு தோஸ்த்து! தலிபான்களை அங்கீகரித்த ரஷ்யா! சர்வதேச அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகத்தில் தாலிபான்களின் வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டில், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் மீதான 9/11 தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்பான அல்-காய்தா மற்றும் அதன் தலைவர் ஒசாமா பின்லேடன் ஆகியோரே அதற்கு காரணம் என அமெரிக்கா அறிவித்தது.
அந்த பின்லேடன் அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்தார். 1996 முதல் அதிகாரத்தில் இருந்த தாலிபன்களின் பாதுகாப்பில் பின்லேடனின் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் இருந்தனர். ஒசாமாவை ஒப்படைக்க தாலிபன்கள் மறுத்தபோது, அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிட்டு, தாலிபன்களை விரைவாக ஆளுகையில் இருந்து அகற்றியது. அங்கு ஜனநாயக அரசு அமைக்க ஆதரிப்பதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்தது.
இதையடுத்து, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே உத்தேச அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாகத் தொடங்கின, 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்கான உடன்பாடு கத்தாரில் ஏற்பட்டது. தாலிபன் ஒப்பந்தத்தின்படி செயல்படால், 14 மாதங்களுக்குள் அனைத்து வெளிநாட்டுப் படைகளையும் திரும்பப் பெற அமெரிக்கா மற்றும் நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.
இதையும் படிங்க: போரில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பிடம் கட் அன் ரைட்டாக பேசிய புடின்! சிக்கலில் உக்ரைன்..!
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதுமே, தாலிபான்கள் உள்நாட்டு போரை தொடங்கி ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் இன்னும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசுக்கு பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்தியா, ரஷ்யா, சீனா உள்பட பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தாலும் கூட அந்த நாட்டின் தாலிபான் அரசுக்கு அங்கீகரிக்கவில்லை.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் சொந்த நாட்டு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இது பெண்களின் கல்வியறிவு உள்ளிட்டவற்றை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனை நீக்க வேண்டும் என்று பல நாடுகளும் கோரி வருகின்றன. அதுமட்டுமின்றி மனித உரிமைகளை தாலிபான்கள் பின்பற்ற வேண்டும். அப்போது தான் அங்கீகாரம் வழங்கப்படும் என்று பல நாடுகளும் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் முதல் முதலாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அதாவது சமீபத்தில் ரஷ்யாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகராக தாலிபான் அரசால் குல் ஹசன் நியமிக்கப்பட்டார். அவரை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் தாலிபான் தூதரை ரஷ்யா அங்கீகரித்தது.
இந்த விழாவில் ரஷ்யாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, தாலிபான் தூதர் குல் ஹசனை சந்தித்து முறைப்படியான சான்றுகளை பெற்று கொண்டார். இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகத்தில் தாலிபான்களின் வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் தாலிபான்களை முறையாக அங்கீகரித்த முதல் நாடு என்ற பெயரை ரஷ்யா பெற்றுள்ளது. இது தாலிபான்களின் வரலாற்றில் பெரிய மைல்கல்லாகும். இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் செயல் இருநாடுகள் இடையேயான உற்பத்தி, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!