ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!
இந்த சம்பவத்திற்கு போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயணிக்கும் ரயில் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகள் உரிய பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன்–போலந்து எல்லைக்கு அருகே, பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணித்த சிறப்பு ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில், அதே பகுதியில் நின்றிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது ரஷ்ய டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் போரிஸ் ஜான்சன் பங்கேற்றார். பின்னர், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சிறப்பு ரயிலில் போலந்து நோக்கி அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ரயில், உக்ரைனின் யாஹோதின் ரயில் நிலையத்திலிருந்து திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே, அங்கு நின்றிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஷ்ய அமைச்சருடன் போட்டோ எடுக்க மறுத்த ஐரோப்பிய நாடுகள்! G20 மாநாட்டில் வெடித்த புதிய சர்ச்சை!
டிரோன் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பே அதன் நடமாட்டத்தை ரயில்வே ஊழியர்கள் கவனித்ததாகவும், இதையடுத்து பயணிகள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முக்கிய தலைவர்கள் பயணித்த சிறப்பு ரயிலை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதற்கான உறுதியான ஆதாரம் அல்லது ரஷ்ய தரப்பின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளதா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்த சம்பவத்திற்கு போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயணிக்கும் ரயில் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகள் உரிய பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
போலந்து எல்லைக்கு அருகே நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம், உக்ரைன் போரின் பதற்றம் ஐரோப்பிய எல்லைப் பகுதிகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையே கிடையாது! உக்ரைன் போரில் புடினின் அதிரடி எச்சரிக்கை!