×
 

ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன் எனக் காவல் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டிற்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தால் மக்கள் ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? எனச் சென்னை உயர்நீதிமன்றம் காவல் துறைக்குக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% EWS இடஒதுக்கீடு ஆகியவற்றை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீட் மற்றும் EWS இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் திராவிடர் கழகம் சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணி நடத்தக் கோரி அளித்த மனுக்கள் அனைத்தையும், போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டித் தொடர்ந்து காவல் துறை நிராகரித்து வருகிறது.

இதையும் படிங்க: தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தற்போதைய அரசு போராட்டங்களுக்கு எதிரானது அல்ல. இருப்பினும், போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்க ஒருவருக்கு அனுமதி அளித்தாலும், பின்னர் அக்கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்துச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

காவல் துறையின் வாதத்தைக் கேட்ட நீதிபதி வி. லட்சுமி நாராயணன், பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையைப் போலப் போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். குடிமக்களின் அந்த அடிப்படை உரிமையை அரசு நசுக்கக் கூடாது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்புச் சாக்குகளைக் கூறி அனுமதி மறுத்தால், பொதுமக்கள் ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? எனக் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணிக்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி அளிப்பது குறித்துக் காவல் துறை பரிசீலித்துத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: புது ரூல்ஸ்..!! விசாரணைக்கு வந்தால் துன்புறுத்தக் கூடாது..! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share