ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்: பிரான்ஸில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு!
உலகப் பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து குறித்து தீவிர ஆலோசனை!
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஜி7 (G7) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுள்ளார். உலகளாவிய சவால்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக வளர்ந்த நாடுகளின் இந்த முக்கியக் கூட்டமைப்பில் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, சர்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் ஆகியவை உலக நாடுகளின் எரிசக்திப் பாதுகாப்பைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன. இத்தகைய இக்கட்டான சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சரின் இந்தப் பங்கேற்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உலகப் பொருளாதாரப் பாதுகாப்பிற்குத் தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து எவ்வளவு அவசியம் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் அதனைச் சீரமைப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து ஜி7 நாடுகளின் அமைச்சர்களுடன் அவர் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஜெய்சங்கர் விவாதித்தார்.
இதையும் படிங்க: மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் ஏற்கனவே மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் எரிசக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜி7 மேடையில் இந்தியா தனது கவலைகளையும், தீர்வுகளையும் முன்வைத்துள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!