×
 

உலகையே மிரள வைத்த சம்பவம்... 60 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கொடூரம்... 94 பேர் பலி, 300 பேர் மாயம்...!

ஹாங்காங்கில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இதுவரை 300 பேரைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ள நிலையில் 300 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விபத்து தொடர்பாக பொறியியல் ஆலோசகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங்கின் தைபோ மாகாணத்தில் வாங்புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்றது. தலா 31 மாடிகளுடன் வரிசையாக உள்ள எட்டு கட்டடங்களில் 2000 வீடுகள் உள்ளன. இதில் 4500க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.  இந்நிலையில் அந்த கட்டடத்தில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட தீவிபத்து அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதில் 94 பேர் உயிரிழந்த நிலையில் 300 பேர் காணாமல் போனதாகவும், அவர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

தீயை கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் சிக்கியவர்களை மீட்கவும் 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டன. அதிக வெப்பநிலை காரணமாக, மீட்புப் பணிகளை மேற்கொள்வது குழுவினருக்கு கடினமாக இருந்தது. பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து குப்பைகள் மற்றும் சாரக்கட்டுகள் கீழே விழுந்து வருவதால், மீட்புப் பணிகள் மற்றும் தீயை அணைக்கும் முயற்சிகள் சவாலானதாக இருந்ததாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: மழையால் தள்ளிப் போன EXAM… மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. யின் தேர்வு தேதி அறிவிப்பு…!

கொழுந்துவிட்டு எறிந்த தீயால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஹாங்காங் காவல் துறையினர், ஒரு வருடத்திற்கும் மேலாக கட்டிடங்களில் பராமரிப்புப் பணிகளைச் செய்து வந்த பிரெஸ்டீஜ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் மற்றும் ஒரு பொறியியல் ஆலோசகரை போலீசார் கைது செய்தனர். கட்டுமான நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலகின் மக்கள் தொகை அடர்த்திமிக்க நகரங்களில் ஒன்றான ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்து மிக மிக மோசமான விபத்தை குறிக்கும் ஐந்தாம் வகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 94 ஆக உயர்ந்த நிலையில், இது 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 176 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பழிக்கு பழி... திமுக நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... 4 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share